ஆறு மில்லியன் குடும்பங்கள் வசிக்கும் இலங்கையில் 5.2 மில்லியன் குடும்பங்கள் மாத்திரமே வீடுகளை வைத்திருப்பதாகவும், சுமார் எட்டு இலட்சம் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாழ்வதோடு, வீடு இல்லாது வாழ்கின்றனர் என மனித நேயத்திற்கான வழ்விடம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் யூ ஹ்வா லீ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற, இணையத்தளம் ஊடான உலக வாழ்விட தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசின் பொறுப்பு என்றாலும், முன்னைய அரசாங்கங்களுக்கு பதில் சொல்லும் எண்ணம் இல்லை.
சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பின்னரும் இலங்கை இன்னும் வளர்ந்து வரும் நாடாக காணப்படுவதாகவும், குறைந்தபட்சம் எந்த அரசாங்கத்தாலும் இந்த நாட்டின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில், மாதிவெலவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 200 வீடுகளை அமைக்க முன்வந்துள்ள நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலக வாழ்விட தினத்தையொட்டி, நீர்கொழும்பு மக்கள் ஐக்கிய அமைப்பு, கம்பஹாவில் வீடற்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒரு கடிதத்தை கையளித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதியான வீட்டை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் சௌபாக்கிய நோக்கு கொள்கையின் ஒரு விசேட அம்சமாகும். எங்கள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என நாம் நம்புகின்றோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த வீட்டு பிரச்சினை 1979 முதல் 40 வருடங்களாக நீடிப்பதாக நீர்கொழும்பு மக்கள் ஐக்கிய அமைப்பின் செயற்பாட்டாளரான சுபத்திரா குமாரி குறிப்பிட்டுள்ளார்.
3 அல்லது 4 குடும்பங்கள், அதாவது, 10 – 15 பேர் ஒரே வீட்டில் வசிக்கும் போது, பல மன வேதனைகள், சண்டைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை இழப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாணத்தில் போருக்குப் பின்னர் வீடற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருவதாக கிராமிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
7,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதி முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ, வாடகை வீடுகளிலோ குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 800 பேர் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.
மயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி அறிவித்து, தமிழ் மக்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்படவில்லை, அவை இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன என கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. இம்பநாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்காக வீட்டு வளாகங்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், சுமார் எட்டு இலட்சம் இலங்கையருக்கு வசிக்க வாழ்விடங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


