கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டமையுடன், சந்தேகநபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கசிப்பு உற்பத்தி மேற்கொண்ட உபகரணங்கள், ஏறத்தாழ 200 லீட்டர் கோடா மற்றும் 30 போத்தல் கசிப்பு ஆகியனவும் கைப்பெற்றப்பட்டது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் கனகாம்பிகை ஆற்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவது தொடர்பில் அவதானித்த கிராமத்த இளைஞர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 119 இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்கப்பட்டபோதிலும் பொலிசார் அதனை தடுக்கவோ அல்லது விசாரணை மேற்கொள்ளவோ இல்லை.
ஆகவே, குறித்த இளைஞர்கள் ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு தகவல் வழங்கியிருந்தனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கு ஊடகவியலாளர்களாலும் தகவல் வழங்கப்பட்டபோதிலும் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு ஊடகவியலாளர்களால் தகவல் வழங்கப்பட்டது. குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவரையும், மீட்கப்பட்ட உபகரணங்களையும் கிளிநொச்சி பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளமையுடன், நீதிமன்றில் வழங்கு தொடரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



