தொடர்ந்தும் போராடி நீதியைப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மீனவ சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது! – அன்னராசா

யாழ். மாவட்டத்தில் நாங்கள் தொடர்ந்தும் போராடித்தான் நீதியைப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மீனவ சமூகம் இன்று தள்ளப்பட்டிருக்கின்றது என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க சமாச சம்மேளனங்களின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை எல்லைக்குள், இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், யாழ். மீனவர்கள் தாக்கப்பட்டதற்காகவும் எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கண்டனப் பேரணியை மேற்கொண்டிருந்தோம்.

இப் பேரணி, கடற்றொழில் நீரியல் பணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுதாகரனிடம் முதலில் மகஜர் கையளிக்கப்பட்டது.

அவர், இந்திய மீனவர்களால் தொடர்ந்தும் யாழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுதொடர்பில் அவர் தன்னுடைய அமைச்சுக்கும், அமைச்சு சார்ந்த அதிகாரிகளிக்கும், உங்களுடைய கோரிக்கையை தெரியப்படுத்துவதாகவும், விரைந்து இதற்கு நடவடிக்கை எடுப்பதாவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, கொரோனாத் தொற்றுக் காரணமாக பொலிஸார் விதித்த தடை காரணமாக குறிப்பிட்ட சிலர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்கு சென்று மகஜர் கையளித்தோம்.

அதன்பின்னர், இந்தியத் துணைத் தூதரகத்தில் மகஜர் கையளிக்கச் சென்றபோது, அங்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தால், அங்கு நின்ற காவலாளியிடம் கையளித்தோம். ஆனால், அங்கு நின்ற காவலாளி கதவைக் கூடத் திறக்காத நிலையில், அந்த மகஜரை பெற்றுக் கொண்டார். இது எங்கள் மீனவ மட்டத்தில் வேதனைக்குரிய சம்பவமாக இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிக்கப்பட்டது. அங்கு, யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் வருகைதந்து மகஜரைப் பெற்று, இதை மேல்மட்டத்திற்கும், உரிய தரப்பு மற்றும் அமைச்சிடம் தெரியப்பத்துவதாகவும், எங்களுடைய முழு ஒத்துழைப்பையும், அழுத்தத்தையும் நாங்கள் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், நாங்கள் தொடர்ந்தும் போராடித் தான் நீதியைப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மீனவ சமூகம் இன்று யாழ் மாவட்டத்தில் தள்ளப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply