பொருளாதார நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்தி உள்ளனர்! ஜயந்த சமரவீர குற்றச்சாட்டு 

எரிபொருள் விநியோக கட்டமைப்பின் தனியுரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி நாட்டின் சுயாதீனத்தன்மையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறை நெருக்கடியினை தீவிரப்படுத்தும் முயற்சியினை மாத்திரம் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை நாளாந்தம் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தான் உள்ளது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கை முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் அந்த யோசனைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் பாரிய விளைவுகள் சமூக மட்டத்தில் தோற்றம் பெறும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக தனியுரிமையினை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி நாட்டின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்கிறது.

முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர, முன்னாள் நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் பொருளாதார நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்தி பிற நாடுகளின் ஆதிக்கத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் போது விருப்பமில்லாவிடினும் பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய நிலை தோற்றம் பெறும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply