நோவூட், ஜுலை 01
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து, சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியான 177 பவுண் தங்க நகைகளை திருடிய சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் சந்தேகத்தின் பேரில் நேற்று (30) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் நகர பகுதியில் வாழும் மூன்று ஆண்களும், பெண் ஒருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 டிசம்பர் 09 ஆம் திகதியன்று குறித்த கடை உடைக்கப்பட்டு தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டன
இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் மூவரைக் கைது செய்தனர்.
கைதானவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக அட்டன், நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (01) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





