பனங்காடு பிரதேச வைத்திய சாலையில் 24 மணிநேர அவசர சிகிச்சைப்பிரிவு;இரவு நேரகடமையிலும் வைத்தியர்.

பனங்காடு பிரதேச வைத்திய சாலையில் 24 மணிநேர அவசர சிகிச்சைப்பிரிவு;இரவு நேரகடமையிலும் வைத்தியர்.

செல்வி வினாயகமூர்த்தி.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் 24 மணிநேர அவசரசிகிச்சைபிரிவு புதன்கிழமை (06) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற பின்தங்கிய அதிகஷ்ட பிரதேசங்களில் வாழ்கின்ற ஏழைமக்களுக்கு பிரதான உயிர்நாடியாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை விளங்குகின்றது.மத்திய மருந்தகமாக இயங்கி வந்த குறித்த வைத்தியசாலை 2006ம் ஆண்டு முதல் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும் ஆளணி பற்றாக்குறை காரணமாக ஒரு ஆரம்ப வைத்தியசாலையாக இயங்கி வந்தது.2008ம் ஆண்டு இவ் வைத்தியசாலையில் பிரசவ கூடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதுடன் இருக்கின்ற வளங்களைக்கொண்டு இப்பிரதேசத்தில் முன்மாதிரியான ஒரு வைத்தியசாலையாக இயங்கி வந்தது.

24 மணிநேர அவசரசிகிச்சைப்பிரிவுடன் அண்மைக்காலமாக ஒரு பிரதேச வைத்தியசாலையாக இயங்கத்தொடங்கிய போதிலும் இரவு நேரகடமைக்கு வைத்தியர் வைத்தியசாலை வளாகத்தில் தங்கியிராமை நீண்ட கால குறைபாடாக காணப்பட்டது.

தூர கிராமங்களிலிருந்து அவசர சிகிச்சைக்காக இவ் வைத்தியசாலை நோக்கி வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் நகர்புற வைத்தியசாலைக்கு பெரும் சிரமத்ததின் மத்தியிலே அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தது.இதன்பிரதிபலனாக அண்மையில் வைத்தியசாலையிலிருந்து இடம்மாற்றம் பெற்றுச்சென்றிருந்த வைத்தியருக்கு பதிலாக புதிதாக ஒரு வைத்தியரை நியமித்ததுடன் மேலதீகமாக ஒரு வைத்தியரையும் இவ் வைத்தியசாலைக்கு நியமனம் செய்ததுடன் வினைத்திறனுடன் கூடிய 24 மணிநேரமும் அவசர சிகிச்சைப்பிரிவு இயங்கும் வகையில் இரவு நேர கடமையில் வைத்தியசாலை வளாகத்தில் தங்கியிருந்து வைத்தியர் கடமையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த வைத்தியசாலையின் ஊடாக மேலதீக சேவைகளை உடனடியாக பெற்றுக்கொடுத்தன் காரணமாக அதிகஷ்டப் பிரதேசங்களிலிருந்து இவ் பிரதேச வைத்தியசாலை நோக்கி வரும் மக்கள் இதன்மூலம் நன்மையடைவர்.

Leave a Reply