நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைய எதிர்கொண்டுள்ளது. அதற்கு முகம்கொடுப்பதற்கு அரசிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசையில் நிற்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை. பால்மா, எரிவாயு, சீனி கொள்வனவு செய்துகொள்ள மக்களை வீதியில் நீண்ட நேரம் நிற்க வைத்திருப்பது குறித்து நாடு என்ற வகையில் நாங்கள் வெட்கப்பட வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள இந்த அரசால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
பொருட்களின் விலையை இப்போது தீர்மானிப்பது நிறுவனங்களே. அரசு வெட்கப்பட வேண்டும். 18.3 வீத மந்தபோஷனம் உள்ள சிறுவர்கள் இருக்கும் நாட்டில், அந்தப் பிள்ளைகளுக்கு பால்மாவைக் கூட வழங்க முடியாமல் உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கோரும்போது, அந்த மக்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதேபோன்று, ஞானசார தேரர் மன்னார் மடுத் தேவாலயத்துக்குச் சென்று மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
மடுத் தேவாலயத்தின் காணிகளை பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முற்படுகின்றார். நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள – தமிழ் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.
தற்போது சிங்கள – கிறிஸ்தவ பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு அரசு இடமளிக்கக்கூடாது. மடுத் தேவாலயத்துக்குச் சொந்தமான சொத்துக்களை பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொள்ள ஞானசார தேரர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார். எனவே, உடனடியாக அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


