கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.
இணுவிலைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் நேற்று நண்பகல் வீடொன்றில் 10 தங்கப் பவுண் நகைகள் திருட்டுப்போனதாக காவல் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பில், யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இன்று மாலை திருட்டு நகைகளை விற்பனை செய்யும் நோக்குடன் யாழில் நடமாடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் நேற்று திருடப்பட்டதுடன் தொடர்புடையவை என முறைப்பாட்டின் அடிப்படையில் கண்டறியப்பட்டன.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் கோப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.


