10 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்! – வெளியான அதிர்ச்சி தகவல்

தேயிலை உற்பத்திக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படாவிட்டால் தேயிலை பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக செயலாளர் ரொஷான் ராஜதோர் தெரிவித்தார்.

தலவாக்கலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேயிலை தோட்டத்தில் இருந்து தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை துாள் கொண்டு செல்லவும், தேயிலை தூள் உற்பத்தி செய்யவும், தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்கவும் தினமும் ஏராளமான டீசல், பெட்ரோல் தேவைப்படுகிறது.

மேலும், மின்வெட்டு காரணமாக எரிபொருள் தேவை அதிகமாக உள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் தேயிலை தூள் மற்றும் உற்பத்திக்கான தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் செல்ல போக்குவரத்து சேவைகளை நடத்தும் பணியாளர்களுக்கு டீசல் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுமார் 10 இலட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தேயிலை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், இந்த நாட்டிற்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரம் நின்றுவிடும். அந்த 10 இலட்சம் பேரின் வேலைகளுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் ரொஷான் ராஜதோர் கூறினார்.

தேயிலை கொள்வனவு செய்யும் நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேயிலையை இந்நாட்டிலிருந்து வழங்க முடியாவிட்டால், அந்த நாடுகள் இந்தியா, கென்யா போன்ற நாடுகளில் இருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பல தோட்ட கம்பனிகளால் தேயிலை தூள் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக பெண் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் போக்கு காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply