
கொழும்பு, ஜுலை 07
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை இன்றைய தினம் தமக்கு கிடைக்க பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அதனை நீதியமைச்சரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்று மீண்டும் பொறுப்பேற்கப்பட்டவர்கள் பொலன்னறுவை, அநுராதப்புரம், தும்பர மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக பதுளை – தெமோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதான இளைஞன் பலியானார்.
அவரது மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ மற்றும் வான்படைகளைச் சேர்ந்த 4 சிப்பாய்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோதல் சம்பவத்தில் மரணமான இளைஞனின் இறுதி கிரியை நேற்று ஹாலிஎல – உடுவர பகுதியில் இடம்பெற்றது.





