ஜூலை 9 நடக்கப்போவது என்ன?
-கேதீஸ்-
நாளை மறுதினம் ஜூலை 9 இலங்கையில் நடக்கப்போவது என்ன என்கின்ற ஒரு கேள்வி பரவலாக காணப்படுகிறது.
இதற்கான காரணம் இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியில் இருந்த அரசாங்கம், அதிலும் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எனும் அடிப்படையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்கள் தலைமை தாங்கும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனும் பாரிய எதிர்ப்பை மக்கள் முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக மே ஒன்பதாம் திகதி பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார். ஜூன் ஒன்பதாம் திகதி நிதி அமைச்சராக இருந்த பாசில் ராஜபக்ச பதவி விலகினார்.ஆனால் மக்கள் கூறிவரும் ஜனாதிபதியாக உள்ள கோத்தபாய ராஜபக்சே இன்னும் பதவி விலகவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனும் கோஷம் தொடர்ந்து வரும் நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜூலை 9ஆம் தேதி நாடளாவிய ரீதியில் பாரிய அளவில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு ஏற்பாடாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூலை 9 பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சந்தித்து ஆதரவை கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் அடிப்படையில் ஜூலை 9ஆம் திகதி gota go home கோஷத்துடன் பாரிய ஆர்ப்பாட்டம் நாடளாவிய ரீதியில் இடம் பெறும் என தகவல்கள் கூறுகின்றது.





