கிழக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல். முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்

(கனகராசா சரவணன்)

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வாகரை அமைப்பாளர் காளிராசா சதீஸ் மற்றும் வவுணதீவு செயற்பாட்டாளர் பிரதீபன: ஆகியோர் வீட்டிற்கு புலனாய்வு பிரிவினரும் பொலிசாரும் சென்று கடுந்தொனியில் விசாரணை செய்து அச்சுறுத்தியுள்ளனர். இதனை தமிழ்த்தேசியக்கள் முன்னணி வன்மையாக கண்டிப்பதாக முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்- தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின

தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் இன்று புதன்கிழமை (06) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வாகரை அமைப்பாளர் காளிராசா சதீஸ் வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கும் பின்னர் காலை 11 மணிக்கும் இரு தடவைகளில் முறையே புலனாய்வுப் பிரிவினரும் பொலிசாரும் சென்று கடுந்தொனியில் விசாரணை செய்துள்ளனர்.

இன்று கரும்புலிகள் நாள் அதன் நினைவாக மாவீரர் பெற்றோருக்கு உலர் உணவு கொடுப்பதற்காக தருமலிங்கம் சுரேஷ் கதிரவெளிக்கு வர இருப்பதாகவும் நினைவேந்தல் செய்யவிருப்பதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அச்சுறுத்தியுள்ளனர்.

அதேவேளை கடந்த (04.07.2022) திங்கட்கிழமை வவுணதீவு செயற்பாட்டாளர் பிரதீபன் வீட்டிற்கு சென்று புலானாய்வுப்பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக எவ்விதமான விட்டுக்கொடுப்பும் இல்லாமல் குரலெழுப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; பின்னால் மக்கள் அணிதிரண்டுள்ள நிலையில் அதனை சிதைப்பதற்காக இவ்வாறான அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

வழமைபோன்று இம்முறையும் யூலை 5 இல் குண்டு வெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற கதையைக்கட்டியுள்ளனர். தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான அண்மைக்காலமாக பொய்களை கூறிவருவது வரலாறாகும். அதேவேளை எமது உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் பெற்றோர் உறவினர்கள் இந்த மண்ணில்தான் வாழ்கின்றனர். நாம் பொறுப்புள்ள ஒரு மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் அவர்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பாக கவனம் எடுத்துவருகின்றோம்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வடகிழக்கிலுள்ள மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அனர்த்தங்கள் வருகின்றபோது புலம்பெயர்தேசத்திலுள்ள மக்கள் தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவுவது வழமை அவ்வாறு கிடைக்கின்ற சிறியளவிலான உதவிகளை கொடுக்காமல் தடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் மக்களை பட்டினியால் சாகடிக்கவா? என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply