பயன்பாட்டுக்கு வராத புதிய ரயில் பெட்டிகள்

கொழும்பு,ஜுலை 7

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 160 ரயில் பெட்டிகளில் 103 பெட்டிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் டயர்கள் மற்றும் ஏனைய உதிரி பாகங்களை கொள்வனவு செய்வது தற்போதைய போட்டிச் சந்தையில் விலையேற்றம் காரணமாக பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளதாகவும் நாடாளுமன்ற கோபா குழுவின் முன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் பொது மக்களுக்கு வினைத்திறனான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் பொதுக் கணக்குகள் குழு கூடியபோது, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

2017ஆம் ஆண்டு இந்திய கடன் மானியத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த தொடரூந்துப் பெட்டிகள் தாமதமாக இறக்குமதி செய்யப்பட்டன.

இதன்போது 160 தொடரூந்துப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டபோதும் அதில் 103 பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை.

இதற்கு இலங்கையில் வெற்றிட பிரேக் சிஸ்டம் இயங்கி வருவதாகவும் எனினும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெட்டிகள்,ஏர் பிரேக் சிஸ்டம் கொண்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பொருத்தமற்ற ரயில்ப் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கு யார் ஒப்புதல் அளித்தது என்று நாடாளுமன்ற உறுப்ப்pனர்கள், அதிகாரிகளிடம் வினவினர்.

இ;வ்வாறான செயற்பாடுகளுக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை சாலைகளுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு டீசல் வழங்குவது தொடர்பிலும் குழு கலந்துரையாடியுள்ளது.

இதன்போது சில தனியார் பேரூந்துகள், போக்குவரத்து சபையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசலை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கிடையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மானியங்களின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு இலங்கை தொடரூந்து சேவையின் மாஸ்டர் திட்டத்திற்காக 1,056,555 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும் அது அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது நிதிநிலை அறிக்கைகளிலோ உள்ளடக்கப்படவில்லை என்பதும் கோபா குழுவின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *