
நாட்டு மக்களின் உண்மைச் செய்திக்கு செவிசாய்க்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைத்து மதிப்பிடுவதும், அடக்குமுறை மூலம் அதனைத் தீர்க்க முயல்வதுமே நாட்டையும் மக்களையும் வழிநடத்தும் என தெரிவித்தார்.
அண்மையில் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர, ரெஹான் ஜயவிக்ரம மற்றும் பெண்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்ததன் மூலம், நாட்டு மக்களின் குரலுக்கு முகம்கொடுக்க முடியாத அச்சத்தையும், இயலாமையையும் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்தக் கைதுகள் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக நிற்பவர்கள் மீதான தனது விரோதப் போக்கை அரசாங்கம் தெளிவாகக் காட்டியுள்ளதுடன், ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான தனது இயலாமையை முழு உலகத்தின் முன் வெளிப்படுத்தியுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் நாகரீக ஜனநாயக உலகில் இருந்து நம்மை மேலும் தனிமைப்படுத்தி தூரமாக்கி, இன்று நம் நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து இனியும் மௌனமாக இருக்க மாட்டோம் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
நாட்டின் தலைவர்கள் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறிய நேரத்தில், அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவதே அவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தெரிவு.
எனினும், நாட்டில் தற்போதுள்ள சட்டத்தைப் பயன்படுத்தியோ அல்லது வேறுவிதமாகவோ இந்த உரிமையை நசுக்குவதற்கு அதிகாரிகள் தயாரானால், இறுதி முடிவு தலைவர்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த நாட்டுக்கோ சாதகமாக இருக்காது. ஆனால் இது நாம் விரும்பும் நிலை அல்ல.
எனவே, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைத்து மதிப்பிடுவதும், அடக்குமுறை மூலம் அதைத் தீர்க்க முயல்வதும் நாட்டையும் மக்களையும் மிகப்பெரும் படுகுழிக்கு இட்டுச் செல்லும் என்பதால் நாட்டு மக்களின் உண்மைச் செய்திக்கு செவிசாய்க்குமாறு பாதுகாப்புப் படையினரையும் அரசாங்க அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





