வவுனியாவில் முறையற்ற விதத்தில் டீசல் விநியோகம் – நீண்ட நாட்களாக காத்திருந்த மக்கள் விசனம்!

வவுனியாவில்  முறையற்ற விதத்தில் இன்றையதினம் டீசல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக நீண்ட நாட்களாக டீசலிற்காக காத்திருந்த மக்கள் அதிருப்தி அடைந்தனர். 

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் காணப்படும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலினை பெற்று கொள்வதற்காக மன்னார் வீதியோரமாக பாரவூர்திகள், டிப்பர் மற்றும் டீசல் வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்றையதினம் டீசல் விநியோகம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. 

இதன்போது அத்தியவசிய சேவைக்குட்பட்ட பொலிஸ் உட்பட அரச நிறுவனங்களின் வாகனங்கள் பல  எரிபொருளினை பெற்று சென்றிருந்தனர். 

இவ்வாறான நிலையில் மாவட்ட செயலகத்தினால் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்து சிலர் கொள்கலன்களில் டீசலினை பெற்று சென்றிருந்தனர். 

மேலும் இன்றையதினம் பாரவூர்திகளிற்கு 20,000 ரூபாய்க்கான எரிபொருட்களும் வான்களிற்கு 15,000 ரூபாவிற்கான எரிபொருட்களும் வழங்கப்பட்டு வந்தது.

 
இந்நிலையில் மாவட்ட செயலகத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து பல வான்கள் வரிசையில்  இன்றி நேரடியாக டீசலினை பெற்றுச்சென்றதுடன், சில வாகனங்களிற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட அதிகளவான எரிபொருளினை நிரப்பி சென்றிருந்தனர். 

இவ்வாறான முறையற்ற முறையில்  சுமார் 25,000 ரூபாவிற்கும் அதிக தொகைக்குரிய டீசலினை பெற்ற வான் ஒன்றினை அவதானித்த பொலிஸார் இச்செயற்பாட்டினை தடுத்து நிறுத்தியதுடன் எச்சரித்திருந்தனர். 

நீண்ட நாட்களாக இரவு பகலாக காத்திருந்த வாகனங்களில் மிக குறுகிய எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே இன்றையதினம் டீசலினை பெற்றிருந்த நிலையில் டீசல் முடிவுற்றதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களிற்கு மட்டும் குறித்த தொகைக்கு மேலதிகமாக எரிபொருள் வழங்குவதற்கு மறுக்கின்ற நிலையில் இவ்வாறானவர்களிற்கு மட்டும் அதிக எரிபொருளினை பெறுவதற்கு யார் அனுமதி வழங்குகின்றனர் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply