தம்புள்ளை அதுபராயாய பிரதேசத்தில், 14 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் தம்புள்ளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகில் குடும்பமொன்று வசித்து வந்துள்ள நிலையில், அந்த குடும்பம் திடீரென வீடு மாறி சென்றுள்ளது.
இவ்வாறு வீடு மாறி சென்றவர்களின் வீட்டில் சிறுமி ஒருவர் இருந்துள்ளதாகவும், அந்த சிறுமிக்கு பாடம் கற்றுக்கொடுப்பதற்காக கடந்த 06 ஆம் திகதி தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் படுகொலைக்குள்ளான சிறுமி சென்றுள்ளார்.
எனினும், அன்றைய தினம் சிறுமி வீட்டுக்கு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் 7ஆம் திகதி சிறுமியை தேடி மோட்டார் சைக்கிளில் சிறுமியை அழைத்து சென்றவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில், அயல்வீட்டுக்காரர்கள் வாடகைக்கு இருந்த வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்துள்ளனர்.
இதன்போது அயல்வீடு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் தம்புள்ளை பொலிஸில் நேற்று (9) முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் அயல்வீட்டுக்காரர்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது குறித்த சிறுமி வீட்டின் அறையொன்றில் கட்டிலில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சிறுமியில் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியை அழைத்து சென்றவரும் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


