சிறந்த இறை சேவகனை நல்லூர்க் கந்தன் மட்டுமன்றி நாம் அனைவருமே இழந்து விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக இறை சேவையாற்றிய குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவு குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்த இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது 92 ஆவது வயதில் இறைபதமடைந்திருக்கும் இறை சேவகர் மாப்பாண முதலியார் தனது வாழ்நாளில் பெரும் பங்கை இறை தொண்டிற்காக அர்ப்பணித்த மகான்.
அன்பிற்கு இலக்கணமாய், பண்பிற்கு எடுத்துக்காட்டாய், எதிர்கால சந்ததிக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்று. அவரின் இழப்பு நல்லூர் தேவஸ்தானத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
நல்லூர் கந்தன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட மாப்பாண முதலியாரின் 57 ஆண்டு கால அர்ப்பணிப்பான சேவைக் காலத்தில் முருக நவதள ராஜ கோபுரம், குபேர நவதள ராஜ கோபுரம், தீர்த்தக்கேணி புனருத்தானம், சண்முகருக்கு பொன்னாலான சுவர்ண சபை விமானம், தேர் மண்டபம், வசந்த மண்டப விஸ்தரிப்பு, சிறிய கோபுரம் என நல்லூர் ஆலயம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
முதலியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நல்லூர்க் கந்தனை வேண்டிக்கொள்கிறேன் என மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.


