ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உட்பட சுமார் 125 பேர் கொண்ட குழுவினர் இந்தியாவிற்குப் பயணமாகவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில், இந்தியா ருடே மற்றும் த டைம்ஸ் ஒப் இந்தியா போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா உத்தரபிரதேசத்தில் உள்ள குஷpநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உட்பட125 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையிலிருந்து திறக்கப்படும் புதிய விமான நிலையத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமய மற்றும் கலாசார இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அங்குரார்ப்பண நிகழ்விற்கு இலங்கையிலிருந்து முதலாவது விமானம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபயவின் ஊடகப் பிரிவினர் இது குறித்து எந்தவிதமான தகவல்களையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


