‘யாழ்ராணி’ முல்லைத்தீவை புறக்கணிக்கிறதா? மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி யாழ்.ராணியின் ரயில் சேவை 6 காலை மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில், சாவகச்சேரி, கிளிநொச்சி,அறிவியல்நகர், முறிகண்டி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, சுன்னாகம், இணுவில், கோண்டாவில், கொக்குவிலில் ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேந்த அதிகளவான அதிகாரிகள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், குறித்த புகையிரதம் மாங்குளம் புகையிரதநிலையம்வரை சேவையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

புகையிரத சேவையை பொறுத்தவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு பிரதான புகையிரத நிலையமாக மாங்குளம் புகையிரத நிலையம் உள்ள நிலையில், யாழ்.ராணி புகையிரத சேவையை மாங்குளம்வரை மேற்கொள்ளாததையிட்டு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாங்குளம் நகரில் இருந்து மல்லாவி ஊடாக வெள்ளாங்குளம் மற்றும் பாண்டியன்குளம் வரையான பகுதிகளின் மக்களும், ஒட்டுசுட்டான் ஊடாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களுக்களில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்களும் சேவை பெறக்கூடிய ஒரே ஒரு புகையிரத நிலையம் மாங்குளம் புகையிரத நிலையமாகும்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பணிக்கு வருகின்ற அதிகாரிகள் மாங்குளம் வந்து அங்கிருந்தே ஏனைய இடங்களுக்கு செல்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் ஏன் தற்போது ஆரம்பிக்கப்பட்ட யாழ்ராணி புகையிரத சேவையை கொக்காவில் காட்டுப்பகுதியில் உள்ள முறிகண்டி புகையிரத நிலையத்தோடு சேவையை நிறுத்துகிறது? அங்கிருந்து ஏனைய இடங்களுக்கு எவ்வாறு பயணத்தை தொடர்வது? அங்கிருந்து வீதிக்கு வர கூட போக்குவரத்து வசதி இல்லை இவ்வாறு இருக்க ஏன் இந்த சேவையை மாங்குளம் வரை நடத்த தீர்மானிக்கவில்லை? இதிலும் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிப்பா? என்ற கேள்விகள் மக்களிடத்தே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply