இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஐயம் இலங்கை தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமா என தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர் ச. அரவிந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யாழ் .கலாச்சார மண்டபத்தை பார்வையிடுவதற்காக யாழ்.வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் யாழ்.மாநகர முதல்வருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்காதமை மனவருத்தத்திற்குரிய விடையம் என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு பல மாவட்டங்களுக்கு சென்று பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் அண்மைக் காலமாக இந்தியாவில் இருந்து உயர் அதிகாரிகள் இலங்கையை நோக்கி வந்தவண்ணமுள்ளார்கள் இவர்களின் இந்த விஜயம் எதை நோக்கியதாக உள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற வேளையில் தான் இந்தியாவின் பார்வை இலங்கைமீது பதிந்துள்ளது. அதிலும் வடக்கு கிழக்கை நோக்கிய பார்வை என்பது அதிகமாகவே காணப்படுகின்றது. மிக நீண்டகாலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்விடங்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கே உண்டு என்று நாம் கருதுகின்றோம்.
மேலும் அந்த அடிப்படையில் இந்திய அரசாங்கம் செயற்படுவதை விடுத்து இலங்கை அரசாங்கத்தின் நிகழச்சி நிரலுக்கேற்ப செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. இந்த நிலைமைகளை மாற்றி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றகோரிக்கையை இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்திடம் முன்வைக்க விரும்புகின்றோம் என தெரிவித்தார்.
இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு வட கிழக்கு தமிழர்கள் சர்வதேசத்தையே நம்பியுள்ளார்கள்.
மேலும் குறிப்பாக இந்திய அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவ்வாறு இருந்தபோதும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் கொண்டு வரப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது. அதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள 13 திருத்தச் சட்டத்திலுள்ள பல விடையங்களை இலங்கை அரசாங்கம் நீக்கியபோதும் கூட இந்தியா அது தொடர்பில் எவ்வித கரிசனையும் கொள்ள வில்லை.
எனினும் இத்தகைய சூழலில் நீண்டகாலமாகவே இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டுமென்ற பல போராட்டங்கள் இடம் பெற்று வரும் வேளையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வுகளும் எட்டப்படாத நிலையே காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள் அபகரிப்பு கலாச்சார மாற்றங்கள் பெளத்த மயமாக்கல்கள் என பல விடையங்கள் இடம் பெற்று வருகின்றன.மேலும் எத்தகயை சந்திப்புக்கள் நடந்தாலும் நீண்டகாலமாக காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கே உண்டு இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று குறிப்பிட்டார்


