பெற்றோல் வரிசையில் நின்ற இன்னுமொருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்றுவிட்டு இளைபாறச் சென்ற ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக வரிசையில் நின்றுள்ளார்.

இந்த நிலையில், இன்றும் பெற்றோல் கிடைக்காமையால் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்ற போதே குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அருகில் நின்ற மோட்டர் சைக்கிளில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்தவர் வவுனியா நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் வவுனியா, கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மாணிக்கம் செல்வகுமார் எனத் தெரியவந்துள்ளது.

Leave a Reply