இந்திய இழுவைப்படகுகள் வருவதை எதிர்த்து பருத்தித்துறையில் இன்று ஆர்ப்பாட்டம்!

இந்திய இழுவைப்படகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்துமாறும் இதனை இவர்கள் நிறுத்த தவறும் பட்சத்தில் நாங்கள் மனித வெடிகுண்டாக மாறி இந்திய இழுவைப்படகை எமது எல்லைக்குள் இருந்து விரட்டுவோம் எனவும் பருத்தித்துறைமுனை கடற்றொழில் கூட்டுறவுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறைமுனை கடற்தொழில் கூட்டுறவுச்செயலாளர் கயிற்றன் எமது சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்,

எமது மீனவர்கள் இந்திய இழுவைப்படகினாலும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களாலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இப் பிரச்சினைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும், கடற்றொழில் அமைச்சரும், அரசாங்கமும் முடிவு தருவதாகத் தெரியவில்லை. இதனால், நாங்கள் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறோம்.

நாங்கள் எடுத்த முடிவு பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும், அதாவது, கடற்தொழில் அமைச்சரின் கட்சியாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, சைக்கிள் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்கான தீர்வைப் பற்றிப் பேசவில்லை.

இன்று எமது முனை எல்லைக்குள் இந்திய இழுவைப்படகுகள் வருவதை எதிர்த்து, பதாகைகள் தயார் செய்து ஆர்பாட்டம் செய்வதாக முடிவு செய்து இருக்கின்றோம்.

மேலும், அதைத் தொடர்ந்தும், அவர்கள் வர எண்ணினால், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்பதையும் நாங்கள் உறுதியாகக் கூறுகின்றோம்.

எமது மீனவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சி செய்வதில் இருந்து, இன்று வரை பல லட்சம் பெறுமதியுடைய பொருட்களை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும், கடற்றொழில் அமைச்சாலும் ஒரு கொடுப்பனவும் கொடுக்கப்படவில்லை.

கடற்றொழில் அமைச்சர் மட்டக்களப்பு, மூதுரிலோ வயல் அழிந்து விட்டது என்றவுடன் உரம் கொடுக்கச் செல்கிறார்கள். ஆனால், கடற்றொழில் சார்ந்த மக்களுக்கு எந்த ஒரு கொடுப்பனவும் வழங்குவதற்கு அவர் தயாராகவில்லை.

இந்திய இழுவைப்படகுகள் எமது மக்களுடைய வலைகளை அறுத்து செல்வதை நாம் இவர்களுக்குத் தெரியப்படுத்தியும், ஆனால், இதுவரையில் எந்த ஒரு மீனவர்களுக்கும் இழப்பீடு தரவில்லை.

ஆகவே, எவரையும் நம்ப நாம் தயாராக இல்லை. இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் எமது செயற்பாட்டை பார்த்தாவது ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்பதே எமது முடிவு.

கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்புக்குச் சென்று அலரி மாளிகையில் பிரதமரையும் சந்தித்தோம்.

அதற்கு, ஒரு மாதத்திற்குள் இந்த இந்திய இழவைப்படகு நடவடிக்கைகளை நிறுத்துவதாக பிரதமர் எமக்கு வாக்குறுதி அளித்தார். அதனையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு வந்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply