யாழில் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்!

வடக்கிலுள்ள சுகாதார பணியாளர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு, அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு, சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள் சில தினங்களுக்கு முன்பு வழங்கியதை எதிர்த்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணியளவில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இருந்து பேரணியாக புறப்பட்ட சுகாதார பணியாளர்கள், பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த இடத்திற்கு வரவேண்டும், நீதியை எமக்குத் தரவேண்டும், எமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்து, போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களாக எழுப்பினர்.

இதன்போது, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் தற்போது பொறுப்பான அதிகாரிகள் இல்லை என்றும், அதே நேரம் பிறிதொரு தினத்தில் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.

குறித்த உத்தியோகத்தர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சுகாதார அமைச்சு எந்தவிதமான நியமனங்களையும் தற்போது வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கும் நியமனங்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு கூற முடியாது. அதற்கு பதில் வழங்க வேண்டியது ஆளநரே எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சுகாதாரப் பணியாளர்கள், நாங்கள் நீண்ட காலமாகப் பணியாற்றி நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பொழுது எம்மை தவிர்த்து விட்டு தற்போது வந்தவர்களுக்கு நியமனத்தை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தொடர்ந்து ஏமாற்று வார்த்தைக்கு இணங்க முடியாது என்றும் உடனடியாக நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்தக் கோரியும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply