கனேடிய தூதுவர்- யாழ் முதல்வர் இடையிலான சந்திப்பில் நடந்தது என்ன?

இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும் யாழ்.மாநகரசபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்.மாநகரசபையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், யாழ் நகரை தூய்மையாக வைத்திருப்பதற்குரிய திண்மக்கழிவு பொறிமுறை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எமது நாடு, பிரதேசம் போன்றவை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, எமது சொந்த கட்டடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதற்குரிய கட்டமைப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதாக கனேடிய தூதுவருக்கு எடுத்து உரைத்ததாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவின் டொராண்டோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பாகவும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் எழுதப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் முறையாக செயற்படுத்தப்படவில்லை எனவும், அதனை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும் மணிவண்ணன் முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, மணிவண்ணனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கனேடிய தூதுவருக்கு, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் அவருக்கு தெளிவாக விளங்கப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்களுடைய ஒப்பந்தம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும் கவனத்திற் கொண்டு , இலங்கை அரசங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கும் கனேடிய தூதுவர் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார் என மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இச் சந்திப்பில் கனேடிய தூதுவருக்கு மணிவண்ணனால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply