வடக்கில் இதுவரை 783 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! – ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபர் மாதத்தில் கொரோனாப் பரவலின் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், வடக்கில் இதுவரை 783 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபர் மாதத்தில் கொரோனாப் பரவலின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வடக்கில் இதுவரையில் 37,525 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஓகஸ்ட்டில் 14,633 ஆகவும், செப்டம்பரில் 9,414 ஆகவும், ஒக்டோபரில் 942 ஆகவும் தொற்றுப் பரவல் எண்ணிக்கை காணப்படுகின்றது.

அதேபோல, வடக்கில் இதுவரையில் கொரோனாவால் 783 பேர் உயிரிழந்துள்ளனர். ஓகஸ்டில் 228 பேரும், செப்டெம்பரில் 348 பேரும், ஓக்டோபரில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

எனவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவதன் மூலமும் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply