இந்தியாவின் அழுத்தத்தாலேயே மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது! சிவாஜிலிங்கம்

இலங்கையில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்கூட இந்தியாவின் அழுத்தத்தினாலேயே அறிவிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்த ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்குள்ளேயே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என எண்ணவில்லையென்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

ஆகவே, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் புது டெல்லியிலே அன்றைய பிரதமர் ரஜீவ் காந்தி அவர்களாலும் இந்திய அரச பிரதிநிதிகளாலும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், அதேநேரம் ஐந்து ஆயுத போராட்ட இயக்கத் தலைவர்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் ஒன்று தெளிவுப்படுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு இணைப்பு நிரந்தரமாக இருக்கும், அதிலே நாங்கள் பிரிப்பதற்கு விடமாட்டோம். கிழக்கு மாகாண வாக்களிப்பு என்பது ஜயவர்த்தனவுக்கு கொடுத்த துருப்புச் சீட்டே தவிர அதை ஒருபோதும் விடமாட்டோம் என்று தெரிவித்தார்கள்.

அதனடிப்படையிலேதான் ஆயுத இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை கையளித்தன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply