ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் உட்பட மேலும் பல பொலிஸ் குழுக்கள் கடந்த நான்கு நாட்களாக விசாரணையில் ஈடுபட்டு வந்திருந்தன.
இதன்போது, சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரனை இராகலை பொலிஸார், கடந்த இரண்டு தினங்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்துவந்தனர்.
இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியதாகவும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லை எனப் பொய் சொல்லியதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த அவரை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வலப்பனை நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தியபோதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விபத்து சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த தங்கையாயாவின் மகனான இரவீந்திரன் மது போதையில் வீட்டுக்கு வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.



