சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது. அது நிலையானது. இதுவே யதார்த்தபூர்வமான உண்மைகூட. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அவரை பதவி விலக வைப்பதற்கு சிங்கள, பௌத்த சக்தி முன்னின்று செயற்பட்டது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ சிங்கள, பௌத்த தலைமைத்துவம், சிங்கள,பௌத்த அதிகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எமக்கு எதிராக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நாட்டில் சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாது செய்ய முடியாது. அது நிலையானது. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிலர் முன்னெடுக்கும் செயற்பாடுகளையே நாம் விமர்சித்துவருகின்றோம்.
சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அவர் வசம் இருந்த சிங்கள, பௌத்த அதிகாரம் – சக்தி தற்போது இல்லாமல் போயுள்ளது. அதனால்தான் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஏனைய இன மற்றும் மத மக்களின் பூரண ஒத்துடைப்புடனேயே சிங்கள, பௌத்த சக்தியால் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏனைய இன, மத மக்களின் பூரண பங்களிப்புடன் சிங்கள, பௌத்த சக்திதான் செயற்படுகின்றது என்பதை இன்றும் தெளிவாக கூறிவைக்கின்றோம். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்த சக்தி இத்துடன் முடிந்துவிட்டது.
எனவே, இனியும் ஏமாறக்கூடாது. ஏனைய இன மற்றும் மதங்களின் ஒத்துழைப்புடன் எதிர்கால தலைவரை தேர்ந்தெடுக்க நாம் முன்வர வேண்டும்.’ – என்றும் தேரர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பதவி விலக முன்னர், புதிய பிரதமரை நியமிப்பார் என நம்புகின்றோம்.
எனவே, ஜனாதிபதி பதவி விலகியதும் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உட்பட மக்கள் வசம் உள்ள அரச வளங்கள் பாதுகாப்பு தரப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், கட்சி, அதிகார போட்டியை கைவிடுத்து சர்வக்கட்சி அரசுக்காக கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அவ்வாறு வரமுடியாவிட்டால் தகுதியான நபரை நியமிக்க நாம் தயார். தொழிற்சங்க, சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றம்வர, தேசியப்பட்டியல் எம்.பிக்கள் ஐவர் பதவி விலக வேண்டும்.’ – என்றும் தேரர் தெரிவித்தார்.
பிறசெய்திகள்




