யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் இன்று கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வியங்காடு செங்குந்தா சந்தைக்கு அண்மையில் வீதிகளில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் சந்தையில் வியாபாரம் நடைபெறுவது இல்லை எனவும் கடந்த ஒரு வருடமாக இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபையினரிடம், சந்தைக்கு அண்மையில் வீதிகளில், கடைகளில் வியாபாரத்தில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமக்குரிய தீர்வு வழங்கும் வரை இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
நாட்டிலுள்ள சட்டத்தின்படி மரக்கறி சந்தைகளுக்கு அண்மையில் 500 மீற்றருக்குள் மரக்கறி வியாபாரம் செய்ய முடியாது.
எனினும், குறித்த பகுதியில் வீதிகளில் மற்றும் பலசரக்கு மற்றும் ஏனைய கடைகளிலும் மரக்கறி வியாபாரம், பழ வியாபாரம் மேற்கொள்வதால் தமது வியாபார நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், இன்று யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளருடன் கலந்துரையாடியதாகவும், தமக்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடையடைப்பில் ஈடுபடவுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.






