யுகதனவி பங்குகளை வழங்குவதை எதிர்த்து அடிப்படை உரிமை மனு தாக்கல்!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு தடை விதிக்குமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர், அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் இந்த விண்ணப்பத்தில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தப் பங்குகளை வாங்கியுள்ள அமெரிக்காவின் நியூபோர்ட்ரெஸ் நிறுவனத்தின் பெயரும் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவை முடிவை இரத்து செய்து, விசாரணை முடிவடையும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க இடைகாலத் தடை விதிக்குமாறு அடிப்படை உரிமை மனுவில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த நியூ போர்ட்ரெஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான பங்கு பரிமாற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 40 சதவீத பங்குகள் 15 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை மின்சார சபையிடம் மீளக் கையளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, புதிய ஒப்பந்தத்தின் மூலம் கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply