நேரடிப் பேச்சுக்கான பங்காளிகளின் அழைப்பை நிராகரித்தார் கோட்டா!

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சு நடத்துவதே மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், பேச்சு நடத்துவதற்கு அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.

அந்த வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி பதில் கடிதம் ஒன்றை அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதில், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் இருக்குமானால் கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருடன் பேச்சு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, புதிய ஹெல உறுமய கட்சி, அபே ஜனபல கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி மற்றும் யுதுகம் தேசிய அமைப்பு என்பன மேற்படி 11 கட்சிகளில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply