பாடசாலைகளை திறப்பதற்கு ஆசிரியர்கள் வராவிடின் அவர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்த எவ்விதத்திலும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கமாகிய தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தலைவர் சு.விக்னேஸ்வரனந்தன் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கிளிநொச்சியில் காணப்படும் பாடசாலைகளை திறப்பதற்கு ஆசிரியர்கள் வராவிடின் அவர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
நியாயமான முறையில் தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பிற்காக போராட்டங்களை முன்னெடுத்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதத்தில் இவ்வாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்த திட்டமிடுவதன் ஊடாக ஆசிரியர்களை மட்டுமல்ல, எம்மையும் அவமதிப்புச் செய்வதாக அமையும் என்பதோடு, தொழில் சங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
எனவே, இதனை உடனடியாக கைவிடுமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை கேட்டுக்கொள்வதோடு, இவ்வாறான செயற்பாடுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.






