வடகிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது. காரணம் நான் செல்கின்ற அல்லது பார்க்கின்ற இடங்களில் விவசாயிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
அவர்களது வட்டார உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தான் அந்த போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.
சேதன பசளை தொடர்பாக சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அரசாங்கம் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் விவசாயிகளிற்கு சாதகமான பதில் வந்தடையும்.
கடந்த காலங்களிலும் மீனவர்களுக்கிடையே பிரச்சினை நீடித்து கொண்டுதான் இருந்தது. ஆனால், எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றதில் இருந்து இந்தப் பிரச்சினை கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவாகவே இருக்கிறது.
சுதந்திரமாக எந்தவித அழுத்தமும் இல்லாமல் செயற்படுகின்ற ஒரு அமைச்சர். இன்றும் கூட அமைச்சர் எங்களுடைய பிரதிநிதிகள் உட்பட அனைவரிடமும் மிகவும் அவசரமாக செய்திகளை வழங்கி மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், எதிரணியில் இருக்ககூடிய அல்லது, எதிரணியினருக்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றேன். ‘சிங் சக்’ போடுகிறவர்கள் போல் எமது அமைச்சர் அல்ல.
மக்களுக்கான பிரச்சினையை முற்றுமுழுதாக கண்காணித்து தீர்த்துக்கொண்டு வருகின்ற ஒருவரை, கூட்டமைப்பினர் போல் கையாலாகாதவர்கள் துதி பாடுவதையிட்டு, நான் பெரிதாக அலட்டிக் கொள்ள போவதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.






