
கனடாவில் ஐந்து முதல் 11 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேண்டுகோளை பைஸர் நிறுவனம் அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் கனடாவில் மெல்ல, மெல்ல குறைந்து வரும் நிலையில், அங்கிருக்கும் குறைந்த வயது கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனடா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 முதல் 11 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்துள்ளது.
கனடாவின் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்குக் கோரப்பட்ட முதல் வேண்டுகோள் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இளம் பருவத்தினர் 2,268 பேருக்கு சோதனையாகச் செலுத்தப்பட்டது.
இதில் யாருக்கும் எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும், குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசிகள் வழக்கமாகச் செலுத்தப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த டோஸ்களைக் கொண்டுள்ளதாகவும் பைஸர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






