கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால், முற்பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையின் காரணமாக இந்த மாதத்துக்கான முற்பதிவுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான தினங்கள் மற்றும் நேரங்களை பொதுமக்கள், முற்பதிவு செய்து கொள்ளமுடியும்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திகதி மற்றும் நேர முற்பதிவு வசதியின் கீழ், கடந்த சில நாட்களில் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான 4,700 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திணைக்களம் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நெரிசல் குறையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.






