இந்தியா உத்திரபிரதேசத்தில் உள்ள குஷpநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த விமான நிலையம் பௌத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இச் சர்வதேச விமான நிலையத்தின் தொடக்க விழா இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை கொண்டு சென்ற விமானம் தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2,500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கயின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவால் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
இலங்கைத் நாட்டின் பிரதமர், மகிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை என்னும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.
பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூல் பகவத்கீதை. அந்தப் பெருமைமிகு நூலை இலங்கையில் வாழ்கின்ற இந்துக்கள் மட்டுமல்லாது, சகல மதத்தவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த நூல்.
இலங்கைத் நாட்டில் வாழுகின்ற அனைத்து மதத்தவர்களும் அறியும் வகையில் பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்களை, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.






