“இராணுவமே வெளியேறு” என்றால் எம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துவிடுவார்கள்-சி.வி. விக்னேஸ்வரன்

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்த் தான் தமிழர் தாயகம் உய்யும்.ஒற்றையாட்சியின் கீழ் “இராணுவமே வெளியேறு” என்றால் அடுத்த நிமிடமே எம்மைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளர்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்த் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகின்றது.

உள்நாட்டுப் பிராந்திய பாதுகாப்பு கூட்டு சமஷ்டியில் பிராந்தியங்களுக்கே வழங்கப்படும். நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வரும்.

போலிஸ் உரித்துக்கள், காணி உரித்துக்கள், பிராந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு அனைத்தும் பிராந்திய அலகுகளுக்கே வழங்கப்படும்.இன்று படையினர் வடகிழக்கு மாகாணங்களில் போரின் பின்னர் தொடர்ந்து இருப்பதால் பல பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

  1. எமது வாழ்வாதாரம் தடைப்படுகின்றது. எமது நிலங்களை இராணுவம்பயன்படுத்தி இலாபம் பெறுகின்றார்கள்.
  2. எமது சுதந்திரம் தடைப்படுகின்றது. மக்கள் இராணுவம் முகாம் இட்டிருக்கும்இடங்களினூடாகப் பயணிக்க அஞ்சுகின்றார்கள். சுற்று வட்டார பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சத்தில் வாழ்கின்றார்கள்.
  3. தமிழர் தாயக நிலங்கள ; பறிபோவதற்கு படையினரே உறுதுணையாக நிற்கின்றார்கள். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்து உள்ளார்கள்.
  4. திணைக்களங்களுடன் படையினர் சேர்ந்து பிறழ்வான வரலாற்றுக் காரணங்களை முன் வைத்து நிலங்களைக் கையேற்கின்றார்கள்
  5. புத்த பிக்குகளுடன் படையினர் சேர்ந்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர்.
  6. பௌத்த வணக்கஸ்தலங்களை பௌத்தர்கள் அல்லாத இடங்களில் நிர்மாணிக்க படையினர் உதவி புரிந்து வருகின்றனர்.
  7. படையினர் வடமாகாண மக்களின் நடமாட்டங்கள், எவர் எவருடன் அவர்கள் உள்ளூரில் தொடர்பு வைத்துள்ளார்கள், மற்றும் அவர்களுக்கு யார் யாருடன் வெளிநாட்டிலும் தொடர்பு இருக்கின்றது என்பவை சம்பந்தமான முழு விபரங்களையும் சேகரிக்கின்றார்கள். இவை உத்தியோகபூர்வ
    காரணங்களுக்கே என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் பணம் பறித்தல்,கடத்தல் போன்ற பல காரியங்களுக்கும் இவ்வாறான தரவுகள்
    பாவிக்கப்படுகின்றன.
  8. இங்குள்ளவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களுடன் தொடர்பு கொள்ளும் போதுஅவர்கள் புலிகள் இயக்கத்துடன் முன்னர் தொடர்புடையவர்கள் என்று
    கண்டால் உடனே இங்குள்ளவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய படையினர் உதவுகின்றார்கள்.
  9. உள்ளூர் மக்கள் பலரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சில நன்மைகளைச் செய்து அவர்களைத் தமது கையாட்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மாற்றுகின்றார்கள்.
  10. இன்று மத்திய அரசாங்கக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளாக வட கிழக்கு மாகாணங்களில் வலம் வருபவர்கள படையினர் இங்கு வேரூன்றி
    நிற்கின்றார்கள் என்ற ஒரே ஒரு பலத்தின் நிமித்தமாகவே அவ்வாறு வலம் வருகின்றார்கள். அரச பலம் என்பது இவர்களுக்கு இங்கு முகாம்
    இட்டிருக்கும் படையினர் மூலமே கிடைக்கின்றது. படையினர் வடகிழக்கில் இருந்து வெளியேறி விட்டால் அரச கட்சிகளின் பிரதிநிதிகளின் இருப்பு
    கேள்விக்கிடமாகிவிடும். அது மட்டுமல்ல. தெற்கிலிருந்து இழுவைப்படகுகள் இங்கு வந்து எமது கடல்வளங்களைச் சூறையாடுவது நின்று விடும். திணைக்களங்கள் எமது மக்களின் தாயக நிலங்களைக் கையேற்பது நின்று விடும். புத்த பிக்குகள் பௌத்த வணக்கஸ்தலங்களை ஏதேச்சாதிகாரமாக வடகிழக்கில் நிறுவுவது நின்று விடும். வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நின்றுவிடுவன. இதுவரையில் கைப்பற்றப்பட்ட நிலங்கள் திரும்பப் பெற கூட்டு சமஷ்டி முறை வழி வகுக்கும்.படையினர் தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் இருப்பதால் இன்னும்
    எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன. இவை யாவற்றையும் முறியடிக்க வேண்டுமானால் கூட்டு சமஷ்டி எமக்கு அவசியம்.
    ஒற்றையாட்சியின் கீழ் “இராணுவமே வெளியேறு” என்றால் அடுத்த நிமிடமே எம்மைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என குறிப்பிட்டார்.

Leave a Reply