நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமே பாரளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
அரசின் உர இறக்குமதி தடையால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று தெரிவித்திருந்தார்.அவரின் கருத்துக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நெல்லுக்கு நாம் நிர்ணய விலை விதித்தமையால் ,சிறுபோகத்தில் விளைந்த நெல்களை விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியாக விற்பனை செய்கின்றனர்.
சுமார் 70 ரூபாய் முதல் விற்பனை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.உங்கள் ஆட்சி காலத்தில் 25 ரூபாய்க்கு நெல்லை விவசாயிகள் விற்பனை செய்தார்கள்.
நாட்டிற்கும் ,விவசாயிகளுக்கும்,மண்ணிற்கும் நோய் இல்லாத உணவை கொடுப்பதே எங்கள் நோக்கம்.
ஆகவே உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லாமல் தேவையான திரவ நைட்ரயன் உரத்தை இறக்குமதி செய்துள்ளோம்.
நீங்கள் குடையை வைத்துக்கொண்டு மழை நேரத்தில் வயலுக்கு சென்று மழையில் நனைந்து கூத்தாடினால் நாம் என்ன செய்வது என தெரிவித்துள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித்தலைவர், நீங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா? நீங்கள் அதை இராசாயன உரம் பயன்படுத்தமால் விளைவிக்கப்பட்டது என்று உறுதி செய்தீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு அமைச்சர் உரிய பதில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






