யாழ். காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவரின் உடலை தமிழகம் அனுப்புவதில் இந்திய – இலங்கைத் தரப்புக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றார்.
காரைநகர் – கோவளம் பகுதிக்குள் கடந்த 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகை மடக்கிப்பிடிக்க முற்பட்ட இலங்கை கடற்படையினரின் படகு ஒன்று மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாக கடலில் மூழ்கியது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போன இந்திய மீனவரைத் தேடி கடற்படையினர் 18ஆம் திகதி இரவு மற்றும், 19ஆம் திகதிகளில் தேடுதலில் ஈடுபட்டனர். இருந்தபோதும் 20ஆம் திகதியே இந்திய மீனவனின் உடலம் மீட்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் செய்தி பரவியது. இதனால் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20ஆம் திகதி நண்பகல், காணாமல் போன இந்திய மீனவர் இலங்கை கடற்படையினரால் உயிரற்ற உடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அது கொண்டு வரப்பட்டது.
அதன்போது காங்கேசன்துறைக்குச் சென்ற நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டமையோடு பிரேத பரிசோதனைக்காக உடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதன் பிரகாரம் 20ஆம் திகதி மாலை காங்கேசன்துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்குச் சடலம்
எடுத்துச்செல்லப்பட்டது. முன்னிரவுபிரேத பரிசோதனையும் இடம்பெற்றது. நீரில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து உடலம் தமிழகம் அனுப்பும் பணி இடம்பெற வேண்டியபோதும் அது தாமதம் அடைகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தத் தாமதம் ஏற்பட தமிழக மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளமையே காரணம் எனத் தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தமிழக மீனவர்களின் கோரிக்கையாக 18ஆம் திகதி மூழ்கிய படகில் பயணித்த ஏனைய இரு மீனவர்களையும் இலங்கை கடற்படையினரிடமிருந்து அழைத்து வந்தால் மட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும், அதனால் அவர்களையும் அழைத்து வந்தாலே உயிரிழந்த மீனவரின்
உடலைப் பொறுப்பேற்போம் என உறுதியாக கூறுகின்றனர்.
இதன்காரணமாக தற்போது இராஜதந்திர மட்டத்தில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இரு மீனவர்களையும்
விடுவித்து உயிரிழந்த மீனவனின் சடலத்துடன் தமிழகத்துக்கு அனுப்புவதற்கான பணிகள் இடம் பெறுகின்றன எனச்
சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் உயிரிழந்த மீனவரின் உடலம் இன்றும் தமிழகம் செல்ல வாய்ப்பில்லை என்பதோடு இவை
அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுநாளை இரு மீனவர்களுடன் உயிரிழந்த மீனவரின் உடலம் கடல் வழியாக தமிழகம் எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






