உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் அப்பாவி மக்களைப் படுகொலை செய்து, அவர்களின் இரத்தத்தில் யாராவது ஆட்சிக்கு வர முயற்சி செய்திருந்தால் அந்த ஆட்சி நிலைக்காது எனவும், உயித்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தேவாலங்களில் ஒன்றான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களானதை குறிக்கும் விதத்தில் நேற்று நடைபெற்ற விசேட வழிபாட்டின்போது பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அப்பாவிகளின் இரத்தத்தில் யாராவது ஆட்சிக்கு வர முயற்சித்திருந்தால் அவர்களால் அந்த ஆட்சியை தொடர்ந்து அனுபவிக்க முடியாது. இதனை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சுதந்திரமாக நடத்த அனுமதிக்க வேண்டும். இது தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயப்பட தேவையில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். யாராவது அதைச் செய்யாவிட்டால் அவர்களும் குற்றவாளிகளா என்று என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
அவர்கள் சரியானவர்களாக இருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து சுயாதீனமாக விசாரணை நடத்த ஏன் சுதந்திரம் வழங்கவில்லை.
விசாரணைகள் இடம்பெறும் விதததைப் பார்க்கும்போது தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இந்த தாக்குதலில் தொடர்புள்ளதோ என நாங்கள் சந்தேகிக்கவேண்டியுள்ளது.
இந்த சதிக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது, ஏன் விசாரணைகள் நடத்தப்படவில்லை. அவர்கள் நிரபராதிகள் என்றால் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு ஏன் முழு சுதந்திரம் கொடுக்கக்கூடாது, ஏன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரிக்கும் அதிகாரத்தை கொடுக்கவில்லை, அவர்கள் ஏன் இந்த விசாரணைகளை அடக்க முயற்சிக்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை யாராவது மூடி மறைக்க முயன்றால் அவர்களும் குற்றவாளிகள் என்றே பொருள் கொள்ளப்படும். குற்றவாளிகளாக இருப்பதால் தான் அவர்கள் இதனை மூடி மறைக்க முயல்கிறார்கள் எனக் கருதப்படும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலம் முதல் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றது. எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் சரியாக ஆட்சி புரியமுடியாத நிலையில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.






