சுமந்திரன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்! குருநகர் மீனவ சங்கம் கோரிக்கை

இழுவை மடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்ட மூலமாக மாற்றித் தரவேண்டும் என குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் ஆலோசகர் ம.இமானுவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும், எமது குருநகர் பிரதேசத்தில் 400 இழுவை மடி தொழிலாளர்கள், 200 சிறு படகு தொழிலாளர்கள் மற்றும் 100 தூண்டில் கடல் அட்டை தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களை உள்ளடக்கியதுதான் குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கமாகும்.

கடந்த 45 வருடங்களாக எமது கடற்பரப்பில் இந்த இழுவை மடி தொழிலை குருநகர் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

நாம் ஏனைய கடற்றொழில் புரிபவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில், வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே அதாவது திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில், இழுவைமடி தொழிலை காலங்காலமாக மேற்கொண்டு வருகிறோம்.

எமது கண்டல் பிரதேசத்தில் தான் இந்திய இழுவைப் படகுகளும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாம் கடல் வளங்களுக்கு சேதம் விளைவிக்காத தொழில் உபகரணங்களை பயன்படுத்தி தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.

எங்களுடைய இயந்திர படகு, தொழில் உபகரணங்களுடன்ஒப்பிடும்போது, இந்திய தொழில் உபகரணங்கள் படகுகள் பல மடங்கு பெரியதாக காணப்படுகின்றது.

இந்தியர்கள் இரட்டைமடி கொண்ட தொழில் உபகரணங்களை வைத்து நமது பிரதேசத்தில் தமது தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

2017 ஆம் ஆண்டில் தடைச் சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது

இதற்கு முக்கிய காரணமாக, அந்த நேரத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் இந்திய இழுவைமடி தொழிலை நாங்கள் எமது பிரதேசத்தில் இல்லாதொழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தால் அதனை நிறுத்தி விட முடியும் எனச் சொல்லப்பட்டது.

எனவே, இது தொடர்பில் இழுவை மடி தடை சட்டமூலத்தை கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழரசு கட்சியின் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருடன் இந்த சட்டத்தை கொண்டு வந்தால் எமது தொழில் பாதிக்கப்படும், எமது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கும் என பலமுறை பேசியிருந்தோம்.

அப்போதைய, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடனும் இதுபற்றி பேசியிருந்தோம்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையின்படி கடலில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் விஞ்ஞானபூர்வமாக கடல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இடங்கள் இந்த தொழில் முறைக்கு ஏற்ற இடங்களாக அடையாளப்படுத்தப்படும் பட்சத்தில் கடற்தொழில் அமைச்சர் அந்தந்த பிரதேசங்களில் தொழில் செய்வதற்கு அனுமதி அளிக்க முடியும் என ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

எனவே, இந்திய இழுவைமடி தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் முகமாகவே சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

இது உள்ளூர் மீனவர்களுக்கு தடை சட்டம் பொருந்தாது உள்ளூர் மீனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ‘நாரா’ நிறுவனத்தினரால் எமது பகுதியில் ஆய்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு, அறிக்கை கடற்தொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்கள் அடையாளமிடப்பட்டு, அந்த இடங்களில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதிக்கப்படும். அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர்ந்த இடங்களில் தொழில் புரிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நீரியல் வளத் திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டது.

இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்றபின் தான் எமது தொழிலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், சுமந்திரன் எம்மை சந்தித்து கலந்துரையாடும் போது அவர் தன்னுடைய தேர்தல் விடயங்களை பேசிய பின்னர் அவரிடம் நாங்கள் வினவினோம்.

நீங்கள்தானே எமது உள்ளூர் இழுவை மடி தொழில் தொடர்பான பிரேரணையை நிறைவேற்றினீர்கள், அதனை சட்டமூலமாக மாற்றித் தாருங்கள் என கோரியிருந்தோம்.

தேர்தல் முடிந்த பின் நான் நாடாளுமன்ற உறுப்பினராகி உடனடியாக அந்த நடவடிக்கையில் இறங்குவேன் என உறுதிமொழி அளித்திருந்தார்.

தற்போது நாங்கள் கடல் வளத்துக்கோ, சுற்றுச்சூழலுக்கோ ஏனைய தொழில்களுக்கோ பாதிப்பில்லாத வகையிலே எமது இழுவை மடி தொழிலை வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மற்றவர்களுக்கு இடையூறு இல்லாது மேற்கொண்டு வருகின்றோம்.

ஆகவே, சுமந்திரன் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியான, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சட்ட மூலமாக மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply