மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து இரண்டு இளைஞர்களை மிருகத்தனமாகத் தாக்கிய போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தருக்கு யாரையும் தாக்கும் உரிமை கிடையாது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு இன்று காலை தகவல்அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மட்டக்களப்பில் விபத்து நடந்த இடத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அளவீடு செய்து குறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த நபர்கள் மிக வேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்றிருக்கிறார்கள்.
பொலிஸ் உத்தியோகத்தர் அளவீட்டுக்குப் பயன்படுத்திய நாடாவையும் மோட்டார் சைக்கிளில் கொழுவி அவர்கள் 500 மீட்டர்கள் வரை நிறுத்தாமல் இழுத்துச் சென்றுள்ளார்கள்.
இதனையடுத்தே அவர்களை துரத்திச் சென்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பிடித்துள்ளார்.
எனினும், அவர்களைத் தாக்குவதற்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு உரிமை இல்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகரவின் இந்த தகவலை டுவிட்ரில் பகிர்ந்து, உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக சாணங்கியன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததன் மூலம் ஆரோக்கியமான எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் நன்றி. கூட்டாகச் செயல்பட்டு இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்போம் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இந்த அநாகரிக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.






