வடக்கில் 16 தொடக்கம் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஓக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாத் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18 தொடக்கம் 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் தடுப்பூசி நாடளாவிய ரீதியில் ஓக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்தகட்டமாக, வடக்கில்; 16 தொடக்கம் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஒருதடவை மாத்திரம் ஓக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
பாடசாலையை விட்டு விலகிய 16 தொடக்கம் 19 வயதுடையவர்களுக்கு, அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு 16 தொடக்கம் 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையை தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊரக்காற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார வைத்திய அதிகாரிபணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள், சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தடுப்பூசியைப் பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.






