மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது! வடிவேல் சுரேஸ்

நாட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில், இந்த அரசாங்கம் நகைச்சுவை பேசிக்கொண்டிருக்கின்றது என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடியால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிவிடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது.

மேலும், மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் நகைச்சுவை பேசிக்கொண்டிருக்கின்றது என கடுமையாக சாடியுள்ளார்.

எமது மக்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

மலையக மக்களை புறக்கணிப்பதை கண்டிப்பதோடு, ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் எமது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளத்திலும் ஏமாற்று நாடகம் தொடர்கின்றது.

தொழிற்சங்கம் மற்றும் அரசியலுக்கு அப்பால் மக்களுக்காக வீதியில் இறங்குவதற்கு நாம் தயார். மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை , கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *