இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இராணுவ வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தின நிகழ்வின் முதலாவது பொப்பி மலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அணிவிக்கப்பட்டது.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
பொப்பி மலர் விற்பனையின் மூலம் பெறப்படும் நிதி, பாதுகாப்புப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையில் பொப்பி மலர் தின நிகழ்வு 1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு, இம்முறை 77 ஆவது தினம் நினைவு கூரப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று உலகின் பல்வேறு நாடுகளில் பொப்பி மலர் தினம் நினைவு கூரப்படுவதோடு, இலங்கையிலும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு அண்மையில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் நினைவு கூரப்படுகின்றது.
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாப்பிட்டிய, பொருளாளர் மேஜர் ஸாந்திலால் கங்கானம்கே, நினைவுக்குழுவின் தலைவர் லெப்டினன்ட் கேர்ணல் ஏ.தீபால் சுபசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.







