கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களை அபிவிருத்தி செய்யத் திட்டம்

கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில், நேற்று திங்கட் கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் கூட்டுறவுச் சங்கங்களின் இயலுமையை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு கூட்டுறவு சங்கங்களை வழிகாட்டுதல், அதிகாரமளித்தல் மற்றும் கண்காணிப்பதன் மூலம் கூட்டுறவு அமைப்புகளை ஊக்குவித்தல், தரமான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் ஊடாக சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், உற்பத்தித் தொழில் முயற்சிகள் மேற்கொள்ளும்தல் போன்ற நோக்கத்தின் அடிப்படையில், இப் பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கை, நேற்று காலை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில் கைச்சத்திடப்பட்டது.

மேலும், இத் திட்டத்திற்கான நிதியை we-effect அமைப்பு வழங்கவுள்ளதோடு, இதனை கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்துடன் இணைந்து இளைஞர் அபிவிருத்தி அகம் அமுல்படுத்தவுள்ளது.

அதன்படி, திறன் மேம்பாட்டு திட்டத்தின்படி, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளமான தூரநோக்கிற்கு ஏற்ப ஊழலற்ற கூட்டுறவு சங்கங்களை உருவாக்குதல் மற்றும் கணக்கியலில் வெளிப்படைத்தன்மை போன்றவை இச்செயற்றிட்டத்தின் மூலம் கூட்டுறவு சங்கங்களின் சேவையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டுறவு சங்கங்களில் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள தடைபட்ட சட்டத்தை புதுப்பித்து மாற்றல், வெளிப்பாடு வருகைகள் , ஸ்தாபன சட்டப் பிரிவு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் என்பனவும் உள்வாங்கப்பட்டவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அ. ஜோகசாந்தி, we-effect இன் வதிவிடப்பிரதிநிதி ரி. மயூரன், திட்ட அதிகாரிபிரியந்த, அகம் நிறுவன செயலாளர் மு. கஜேந்திரன், திட்ட முகாமையாளர் த. திலீப்குமார், இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply