இலங்கை இராணுவத் தளபதிக்கு ரஸ்யாவில் பாரிய வரவேற்பு!

கடந்த 23 ஆம் திகதி ரஸ்யாவுக்குப் பயணித்துள்ள இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, ரஸ்ய பாதுகாப்பு அமைச்சில் வைத்து, ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவால் நேற்று பாரிய வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ரஸ்ய தரைப்படைகளால் அங்கிகரிக்கப்பட்டதும் தனித்துவமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையிலும் முறையான மற்றும் சீரான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

புகழ்பெற்ற அணிவகுப்பு மைதானத்தில் இலங்கை மற்றும் ரஸ்ய நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதோடு, இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது பாரியார் மற்றும் ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஆகியோருக்கு மரியாதை அணிவகுப்புக்கான சீருடை அணிந்த சிப்பாய்களால் கௌரவம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, ரஸ்யாவின் மொஸ்கோவின் கிரெம்லின் சதுக்கத்தின் அலெக்ஸாண்ட்ரோவ்ஸ்கி பூங்காவில் அமைந்துள்ள தெரியாத சிப்பாயின் கல்லறைக்கு, இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவ், ரஸ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#

Leave a Reply