கற்பிட்டியில் உலர்ந்த மஞ்சள் மீட்பு: இருவர் கைது!

புத்தளம், கற்பிட்டி இப்பந்தீவு களப்பு பகுதி மற்றும் கடற்பிரதேத்தில் இருந்து 1,000 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் அதிவேக ரோந்து கப்பல் கடற்படையினர் குறித்த பகுதிகளில் திங்கட்கிழமை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, இப்பந்தீவு களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயத்திர படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது, குறித்த படகில் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அந்த படகில் இருந்த இருவரை கைது செய்தனர்.

5 மூடைகளில் அடைக்கப்பட்ட 160 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் கடற்படையினர் நேற்று மற்றுமொரு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, கைவிடப்பட்ட நிலையில் இரண்டு இயந்திர படகுகளை கடற்படையினர் சோதனை செய்த போது, அந்த இரு படகுகளிலும் உலர்ந்த மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, 25 மூடைகளில் 840 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மஞ்சள் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் நோக்கில் இவை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இப்பந்தீவு களப்பு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகளையும், இரண்டு டிங்கி படகுகளையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply