செளபாக்யா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் 16 வேலைத்திட்டங்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்
சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (26) கந்தளாயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
செளபாக்யா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் அண்ணளவாக ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை செலவிட உள்ளது.
இதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வருமானம் ஈட்டுகின்ற பொறிமுறையை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.
திருகோணமலை மாவட்டத்தில் 16 வேலைத்திட்டங்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சிறந்த உற்பத்திசார் முன்மொழிவுகள் கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றை வழங்கக் கூடியதாக அமையும் என தெரிவித்தார்.
மேலும் குறித்த நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச தவிசாளர் சமன் ஏக்கநாயக்க, கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி ,அரசியல் பிரமுகர்கள் ,அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








