‘ஒரே நாடு ஒரே சட்டம்’ குற்றவாளி தலைமையில் செயலணியா? சாணக்கியன் கேள்வி

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளமை நகைச்சுவையானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமிப்பதா, இந்தக் குழுவே முரண்பாடாக உள்ளது. தற்போதுள்ள சட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் ஒரு குழுவை அமைப்பதன் நோக்கம் என்ன எனவும் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் காரணமாக இருந்துள்ளார் என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அத்துடன், இவரின் வழிகாட்டலின் கீழ், இலங்கையிலுள்ள பல முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயற்பாடுகளை ஞானசார தேரர் ஈடுபட்டு வருவதாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஹோமாகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் ஞானசார தேரருக்கு நீதிமன்றால் 5 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்து.

Leave a Reply